மு.சிவலிங்கம் வலையகம்

சி# மொழிப் பாடங்கள்
 

பாடம் 1.1
ஒரு புதிய மொழியின் தேவை

மனித சமுதாயத்தின் தேவைகளே புதிய கண்டுபிடிப்புகளுக்குக் காரணமாகின்றன. எந்தவோர் அறிவியல் கண்டுபிடிப்புக்கும் பின்னால் ஒரு தேவை மறைந்துள்ளது. கண்டுபிடிப்பு என்பது முற்றிலும் புதியதாகவும் இருக்கலாம். ஏற்கெனவே இருக்கும் ஒன்றின் மேம்படுத்திய வடிவமாகவும் இருக்கலாம். இத்தகைய வரலாற்று நிகழ்வுப் போக்குக்குக் கணிப்பொறி அறிவியல் விதிவிலக்கன்று. மனித வாழ்க்கையில் ஏற்படும் புதிய புதிய தேவைகள் கணிப்பொறித் தொழில்நுட்பத்தை இன்றைக்கு உச்சத்துக்கு இட்டுச் சென்றுள்ளன.

கணிப்பொறியிடம் வேலைவாங்க, நிரல்களை (Programs) எழுதி இயக்க வேண்டும். கணிப்பொறியில் இயக்கப்படுகின்ற நிரல்களை எழுத, இலக்கணக் கட்டுப்பாடுகளுடன் கூடிய மொழி தேவை. கணிப்பொறி அறிவியலாளர்கள் தொடக்க காலம்தொட்டே அத்தகைய மொழிகளை உருவாக்கிப் பயன்படுத்தி வருகிறார்கள். அந்தந்தக் காலகட்டத்தின் தேவைகளுக்கும் பயன்பாடுகளுக்கும் ஏற்பப் புதிய புதிய மொழிகள் உருவாக்கப்பட்டன. அவற்றுள் சில முற்றிலும் புதியன. சில முந்தைய மொழியை மேம்படுத்தி உருவாக்கப்பட்டவை. வேறுசில முந்தைய மொழிகளை அடிப்படையாகக் கொண்டு புதிதாக உருவாக்கப்பட்டவை. அந்த வகையில் சி# என்கிற புதிய மொழி உருவாக்கப்பட வேண்டிய தேவை என்ன என்பதை வரலாற்று ரீதியாக ஆய்வோம்.

 1.1.1 சி மொழியின் உதயம்

ஜெனரல் மோட்டார் நிறுவனத்துக்கு ஒரு மல்ட்டி-யூசர் ஆப்பரேட்டிங் சிஸ்டம் தேவைப்பட்டது. ஏடீ & டீ (AT & T) பெல் ஆய்வுக் கூடம் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டது. கென் தாம்ப்சனும் டென்னிஸ் ரிட்சியும் யூனிக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை உருவாக்கிக் கொடுத்தனர். புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் ஃபோர்ட்ரான் மொழிப் புரோகிராம்களை இயக்குவதற்குக் கம்ப்பைலர் தேவைப்பட்டது. அதை எழுதத் தொடங்கினார் தாம்ப்சன். பணி முடியும் தறுவாயில் தாம்சன் ஒரு புதிய கணிப்பொறி மொழியை உருவாக்கிவிட்டிருந்தார். அம்மொழி பி (B) என அழைக்கப்பட்டது. அது இன் டர்பிரட்டரில் இயங்கும் மொழி. எனவே அதன் வேகம் குறைவாக இருந்தது. அதன் வேகத்தை அதிகரிக்க அதனை ஒரு கம்ப்பைலர் அடிப்படையிலான மொழியாக மாற்ற விரும்பினார் ரிட்சி. அதன் விளைவாக சி (C) என்னும் ஒரு புதிய மொழியை உருவாக்கி முடித்தார் டென்னிஸ் ரிட்சி. இது நடந்தது 1972-இல். 1973-ஆம் ஆண்டு ஏற்கெனவே அசெம்பிளி மொழியில் உருவாக்கி வைத்திருந்த யூனிக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை முழுக்கவும் சி-மொழியில் எழுதி முடித்தனர் ரிட்சியும் தாம்ப்சனும்.

கணிப்பொறி மொழிகளின் வரலாற்றில் சி-மொழியின் தோற்றம் ஒரு திருப்புமுனை ஆயிற்று. கட்டமைப்பு நிரலாக்கப் புரட்சி (Structured Programming Revolution) நடைபெற்றுக் கொண்டிருந்த காலம் அது. அப்புரட்சியின் வெற்றி வீரனாக சி-மொழி வாகை சூடிக் கொண்டது. அக்கால கட்டத்தில் பாஸ்கல் போன்ற மிகச்சிறந்த கட்டமைப்பு நிரலாக்க மொழிகள் பயன்பாட்டில் இருந்த போதிலும் சி-மொழியின் கச்சிதமான அமைப்பு (compactness), கையாள எளிமை, மறைந்து கிடக்கும் திறன், வலிமை, புரோகிராமரின் திறமைக்கு ஏற்பத் திறம்படும் தன்மை, இன்னும் இவைபோன்ற சிறப்புத் தன்மைகளினால் ஏறத்தாழ நாற்பதாண்டுகளுக்குப் பின்னும், சீரிளமைத் திறம்குன்றாச் செம்மொழியாய்க் கணிப்பொறித் துறையில் சி-மொழி வலம் வந்து கொண்டிருக்கிறது.

மிகப்பெரிய சிக்கலான மென்பொருள்களை உருவாக்க வேண்டியது காலத்தின் தேவை ஆயிற்று. ஆனால் சி-மொழியில் அத்தகைய மென்பொருள்களை உருவாக்குவதும், அதற்கான நீண்ட புரோகிராம்களை படித்துப் புரிந்துகொண்டு பிழை திருத்துவதும் மிகவும் கடினமான பணியாயிற்று. சி-மொழியில் அதில் இல்லாத ஒரு முக்கியமான கருத்துருவின் (concept) தேவை உணரப்பட்டது. அதுதான் கிளாஸ் (class) எனப்படும் இனக்குழு.

 1.1.2 சி++ மொழியின் பிறப்பு

1970-களின் இறுதியில் மிகப்பெரிய மிகச் சிக்கலான நிரல்கள் உருவாக்கப்பபட்டன. சி-மொழி உட்பட அக்காலத்திய கட்டமைப்பு நிரலாக்க மொழிகளினால் நிலைமையைக் கையாள முடியாத நிலை ஏற்பட்டது. நியூஜெர்ஸி முர்ரே ஹில்லில் பெல் ஆய்வுக் கூடத்தில் பணியாற்றி வந்த ஜேர்ன் ஸ்ட்ரௌஸ்ட்ரப் ஒரு சிமுலேஷன் பிராஜெக்டில் ஈடுபட்டிருந்தார். அந்தப் பிராஜெக்டின் புரோகிராம்களில் எடுத்தாளப் பொருள்நோக்கு நிரலாக்கக் (Object Oriented) கருத்துருக்களான கிளாஸ் (class), ஆப்ஜெக்ட் (object) ஆகியவை தேவைப்பட்டன. அக்காலத்திய ஊப் (OOP) மொழியான சிமுலாவில் அத்தகைய கருதுருக்கள் இருந்தன. எனவே சிமுலாவில் புரோகிராம்களை எழுதத் தலைப்பட்டார். ஆனால் சிமுலா மொழி அவர் விருப்பத்துக்கு வளைந்து கொடுக்கவில்லை. எனவே சிமுலாவுக்குப் பதிலாக, விருப்பத்துக்கு வளைந்து கொடுக்கும் திறன்மிக்க சி-மொழியைத் தேர்ந்தெடுத்தார். ஆனால் சி-மொழியில் கிளாஸ் கருத்துரு இல்லை. எனவே, தனக்குத் தேவைப்பட்ட கிளாஸ் கருத்துருவை சி-மொழியில் புகுத்தினார். அதாவது சி-மொழிக்கு ஆப்ஜெக்ட் ஓரியன்டடு வடிவம் கொடுத்தார். அது ஒரு புது மொழியாகக் காட்சியளித்தது. ஸ்ட்ரௌஸ்ட்ரப் தன் மொழியை கிளாஸுடன்கூடிய சி-மொழி (C with Classes) என்று அழைத்தார். 1983-இல் அம்மொழிக்கு சி++ என்னும் பெயரை அவரது நண்பர் சூட்டினார்.

சி++ மொழி முற்றிலும் புதிய மொழியன்று. பழைய மொழியை அடிப்படையாகக் கொண்டு புதிதாக உருவாக்கப்பட்ட மொழியும் அன்று. பழைய மொழியில் புதியன சேர்த்து மேம்படுத்தப்பட்ட மொழி. சி++ மொழி சி-மொழியை முற்றிலும் உள்ளடக்கியுள்ளது. அனைத்து சி-மொழிப் புரோகிராம்களையும் சி++ புரோகிராமாகக் கம்ப்பைல் செய்து இயக்க முடியும். ஆப்ஜெக்ட் ஓரியன்டடு பாணியில் சொல்வதெனில் சி-மொழியிலிருந்து இன்ஹெரிட் செய்யப்பட்ட மொழி சி++. அதாவது, சி-மொழி அடிப்படை (base) மொழி. சி++ அதிலிருந்து தருவிக்கப்பட்ட (derived) மொழி. சி-மொழியின் திறனும் வலிமையும் சி++ மொழியில் உள்ளடக்கம்.

ஏற்கெனவே பல ஊப் மொழிகள் பயன்பாட்டில் இருந்தபோதிலும், சி++ மொழி மிகச்சிறந்த ஆப்ஜெக்ட் ஓரியன் டடு மொழியாக உருவெடுத்தது. 1980-களின் இறுதிவரை சி++ வளர்ச்சிக் கட்டத்திலேயே இருந்தது எனலாம். 1990-களில் புரோகிரமர்களிடையே மிகவும் செல்வாக்குப் பெற்ற மொழியாக சி++ விளங்கியது. இன்றைக்கும் சி/சி++ மொழிகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட பல நவீன மொழிகள் பவனி வருகின்ற போதிலும், உயர் செயல்திறன் கொண்ட சிஸ்டம் புரோகிராம்களை உருவாக்க ஏற்றவை என அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ள மொழிகளாக சி, சி++ மொழிகளே விளங்குகின்றன.

 1.1.3 ஜாவாவின் வருகை

சன் மைக்ரோசிஸ்டம்ஸ் நிறுவனத்தில், ஓர் எஸ்ஜிஎம் எல் எடிட்டரை உருவாக்கும் முயற்சியில் ஜேம்ஸ் காஸ்லிங் ஈடுபட்டிருந்தார். நுகர்வோர் மின்னணு சாதனங்களுக்கு உட்பொதி மென்பொருளை (embeded software) உருவாக்குவதற்கான கிரீன் பிராஜெக்டில் பேட்ரிக் நாட்டன், மைக் ஷெரிதான், கிரிஷ் வார்த், எட் பிரங்க் ஆகியோர் ஈடுபட்டிருந்தனர். இவர்களுடன் அவ்வப்போது நிகழ்த்திய கலந்தாலோசனைகளின் விளைவாக, ஜேம்ஸ் காஸ்லிங் 1991-இல் ஓக் (Oak) என்னும் மொழியை உருவாக்கினார். வெப் ரன்னர் என்னும் இன்டர்நெட் பிரவுசரை ஓக் மொழியில் எழுத முனைந்தார். அப்போதுதான் புதிய மொழியை ஓர் இன்டர்நெட் மொழியாக உருவாக்கும் எண்ணம் முளைவிட்டது. அதன்பின் சன் நிறுவனம் ஓக் மொழியை ஒரு முழுமையான இன்டர்நெட் மொழியாக வடிவமைத்து வணிக ரீதியில் வெளியிட்டது. ஆனால், ஓக் என்னும் பெயரில் ஏற்கெனவே ஒரு மொழி இருந்துவந்த காரணத்தால், புதிய மொழிக்கு ஜாவா என்று பெயர் சூட்டப்பட்டது. 1990-களில் இன் டர்நெட் பிரபலம் அடைந்தது. இன் டர்நெட் அப்ளிகேஷன்களுக்குப் பெருமளவு தேவை இருந்தது. எனவே இன் டர்நெட் அப்ளிகேஷன்களை உருவாக்குதற்கென்றே ஒரு பிரத்தியேக மொழியின் தேவையும் அப்போது இருந்தது. அத்தேவையை ஜாவா மொழி நிறைவு செய்தது.

ஜாவாவுக்கு முந்தைய மொழிகளின் புரோகிராம்களை ஒரு குறிப்பிட்ட பிராசசர், ஒரு குறிப்பிட்ட ஆப்பரேட்டிங் சிஸ்டம் இவற்றுக்கான கம்ப்பைலரில் கம்ப்பைல் செய்து இயக்க வேண்டும். அந்தப் புரோகிராமை வேறொரு பிராசசர் அல்லது ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயக்க வேண்டும் எனில் அதற்குரிய கம்ப்பைலரில் மீண்டும் கம்ப்பைல் செய்ய வேண்டும். பிராசசர், ஆப்பரேட்டிங் சிஸ்டத்துக்கு ஏற்றவாறு மூலப் புரோகிராமில் திருத்தங்கள் செய்ய வேண்டும். ஆனால் ஜாவா மொழியில் ஒருமுறை எழுதப்பட்ட புரோகிராமை எவ்வித மாற்றமுமின்றி எந்தப் பிராசசரிலும், எந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலும் இயக்க முடியும். அதற்குரிய ஜாவா ரன்டைம் எனப்படும் ஜாவா இன்டர்பிரட்டர் இருந்தால் போதும். அந்த வகையில் பணித்தளம் சாராத (platform independent) முதல் மொழி ஜாவா எனில் மிகையாகாது.

ஜாவா புரோகிராம் கம்ப்பைல் செய்யப்பட்டு பைட்கோடு (bytecode) உருவாக்கப்படுகிறது. பைட்கோடு என்பது அனைத்துப் பிராசசர், ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுக்கும் பொதுவான ஆப்ஜெக்ட் கோடு (object code) ஆகும். அதனை ஜாவா வர்ச்சுவல் மெஷின் அல்லது ஜாவா ரன்டைம் என்று அழைக்கப்படும் ஜாவா இன்டர்பிரட்டரில் இயக்க முடியும். எந்த ஆப்பரேட்டிங் சிஸ்டமாக இருந்தாலும் அந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்துக்குரிய ஜாவா வர்ச்சுவல் மெஷினில் ஜாவா புரோகிராம் இயங்கும். எந்தவோர் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலும் ஜாவா வர்ச்சுவல் மெஷினை செயல்முறைப்படுத்துவது எளிதாகும். மேலும் மூலப் புரோகிராமில் எவ்வித மாற்றமும் செய்ய வேண்டியதில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

இன்டர்நெட்டில் ஏராளமான செர்வர்கள் பிணைக்கப்பட்டுள்ளன. அவை வெவ்வேறு ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் செயல்படுகின்றன. இன்டர்நெட்டில் உலாவரும் கிளையன்ட் கணிப்பொறிகளிலும் வெவ்வேறு ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் நிறுவப்பட்டுள்ளன. இத்தகைய சூழ்நிலையில் ஜாவா மொழியின் பணித்தளம் சாராப் பண்பு அதனை இன்டர்நெட்டுக்கு உகந்த மொழியாக நிலைநிறுத்திக்கொள்ள உதவியுள்ளது.

ஜாவா, சி-மொழியின் கட்டளை அமைப்புகளை (command syntax) அப்படியே ஏற்றுக் கொண்டுள்ளது. தரவினங்களையும் (data types), செயற்குறிகளையும் (operators) பெருமளவு ஏற்றுக் கொண்டுள்ளது. சி++ மொழியின் ஆப்ஜெக்ட் ஓரியன்டடு புரோகிராமிங் கூறுகளைப் பெருமளவு தக்கவைத்துக் கொண்டுள்ளது. சி++ மொழியின் பாயின்டர், ரெஃபரன்ஸ், ஆப்பரேட்டர் ஓவர்லோடிங், மல்ட்டிபிள் இன்ஹெரிட்டன்ஸ், டெம்ப்லேட் போன்ற கருத்துருக்களைப் புறக்கணித்துவிட்டது. பணித்தளம் சாரா மொழி என்ற வகையில் ஜாவா முற்றிலும் புதிய மொழி என்றபோதிலும் சி, சி++ மொழிகளுக்கு ஜாவா பெரிதும் கடமைப்பட்டுள்ளது என்பதை மறுக்க முடியாது.

 1.1.4 மைக்ரோசாஃப்டின் சி#

1990-களில் கணிப்பொறித் துறை அதிவிரைவான தொழில்நுட்ப வளர்ச்சியைக் கண்டது. குறிப்பாக சாஃப்ட்வேர் பிரிவில் அதிரடியான முன்னேற்றங்கள் ஏற்பட்டன. அணுகுமுறைகளில் அதிநவீனப் போக்குகள் தென்பட்டன. பீசி (PC - Personal Computer) புரட்சி உச்ச கட்டத்தை எட்டியது. உலகிலுள்ள 90% டெஸ்க்டாப் கணிப்பொறிகளில் மைக்ரோசாஃப்டின் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டமே ஆதிக்கம் செலுத்தியது. சாதாரண மக்களும் கணிப்பொறியைப் பயன்படுத்தத் தொடங்கினர். கணிப்பொறிப் பயனாளர்கள் அதிகரித்ததால் இன்டர்நெட் பயன்பாடும் அதிகரித்தது. இன்டர்நெட் மூலமாக நடைபெறும் மின்-வணிக (e-commerce) நடவடிக்கைகளும் அதிகரித்தன. டாட்காம் தொழில்நுட்பம் இயல்புக்கும் அதிகமான முதலீட்டைப் பெற்றது.

சாஃப்ட்வேர் துறையைப் பொறுத்தவரை இன்டர்நெட் அப்ளிகேஷன்களுக்கான தேவை மிகவும் அதிகரித்தது. அதிவிரைவுப் பயன்பாட்டு உருவாக்கக் கருவிகளை (Rapid Application Development Tools) வழங்குவதில் அனைத்து சாஃப்ட்வேர் நிறுவனங்களும் முன்முயற்சி எடுத்தன. இன்டர்நெட் அப்ளிகேஷன் உருவாக்கத் தேவையை சன் மைக்ரோசிஸ்டத்தின் ஜாவா பெருமளவு நிறைவு செய்தது. இதற்கிடையே மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அதிவிரைவுப் பயன்பாட்டுக் கருவியாகத் தன்னுடைய விசுவல் ஸ்டுடியோவை உலவவிட்டது. டெஸ்க்டாப் விண்டோஸ் அப்ளிகேஷன்கள் மட்டுமின்றி இன்டெர்நெட் அப்ளிகேஷன்களை உருவாக்குவதற்கான இன்டர்டெவ் அதில் ஓர் அங்கமாக இடம்பெற்றிருந்தது. விசுவல் ஜே++ என்ற பெயரில் ஜாவா மொழிக் கருவிகள் விசுவல் ஸ்டுடியோவில் இடம்பெற்றிருந்தன.

ஜாவா மொழியைப் பொறுத்தவரை அது சன் மைக்ரோசிஸ்டத்தின் தனிப்பட்ட சொத்து. சி, சி++ மொழிகளைப் போன்று பொதுக் கள மொழியாக (Public Domain Language) ஜாவா வழங்கப்படவில்லை. அன்சி (ANSI) தரப்பாடுகளின்) அடிப்படையில் டர்போ சி, டர்போ சி++, போர்லாண்டு சி++, மைக்ரோசாஃப்ட் சி++ என்றெல்லாம் வெவ்வேறு நிறுவனங்கள் வெவ்வேறு முறையில் அம்மொழியை நடைமுறைப்படுத்த முடியும். ஆனால் டர்போ ஜாவா, போர்லாண்டு ஜாவா, மைக்ரோசாஃப்ட் ஜாவா என ஒவ்வொரு நிறுவனமும் ஜாவாவைத் தமக்கேற்றபடி நடைமுறைப்படுத்த முடியாது. மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அவ்வாறு முயல்வதாக சன் நிறுவனம் வழக்குத் தொடர்ந்து வெற்றியும் கண்டது. இந்தச் சூழ்நிலையில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனக்கென ஒரு பாதையை வகுத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

  • நாள்தோறும் புதுப்புதுத் தொழில்நுட்பங்களைப் புகுத்த வேண்டிய நெருக்கடி
  • தொழில் போட்டி காரணமாக ஜாவாவுக்கு இணையான ஒரு மொழியை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம்
  • சன் மைக்ரோசிஸ்டம் நிறுவனத்துடன் ஜேவிஎம் தொடர்பாக நடைபெற்ற வழக்கின் முடிவு
  • சி++ மொழியின் தொடர்ச்சியாக, புது யுகத்துக்கான ஒரு புதிய மொழியை அறிமுகப்படுத்த வேண்டிய கட்டாயம்
  • ஸ்டக்சர்டு புரோகிராமிங், ஆப்ஜெக்ட் ஓரின்டடு புரோகிராமிங் இவற்றுக்கு அடுத்த கட்டமாக காம்பொனன் டு ஓரியன்டடு புரோகிராமிங் திறனுள்ள ஒரு மொழியை உருவாக்க வேண்டிய தேவை

இவற்றின் ஒட்டுமொத்த விளைவாக மைக்ரோசாஃப்ட் பாசறையிலிருந்து பாயும் புலியென சி# வெளிவந்துள்ளது. சி# ஒரு தனிப்பட்ட படைப்பாக இல்லாமல் மைக்ரோசாஃப்டின் டாட்நெட் தொழில்நுட்பத்தின் ஓர் அங்கமாக இணைக்கப்பட்டுள்ளது. சி# மொழி சி-மொழியின் கட்டளை அமைப்புகளையும், தரவினங்களையும், செயற்குறிகளையும் அப்படியே ஏற்றுக் கொண்டுள்ளது. struct, enum உண்டு. சி++ மொழியின் ஆப்ஜெக்ட் ஓரியன்டடு கருத்துருக்களைப் பெருமளவு ஏற்றுக் கொண்டுள்ளது. ஜாவா புறக்கணித்த ஆப்பரேட்டிங் ஓவர்லோடிங் சி# மொழியில் உண்டு. பாயின்டருக்கும் வழியுண்டு. ஜாவாவில் இல்லாத பல புதிய கருத்துருக்களும் சி#-இல் உள்ளது. ஜாவாவைக் காட்டிலும் சி# மொழியே சி, சி++ மொழிகளின் நேரடி வாரிசு எனக் கூறுவது சாலப் பொருந்தும்.

 1.1.5 பெயர்க் காரணம்

ஒரு புதிய மொழியைக் கற்க விரும்புபவர்களுக்கு, அம்மொழிக்கு என்ன காரணத்துக்காக அப்பெயர் இடப்பட்டது என்பதை அறிய ஆவல் இருக்கும். சி, சி++ ஆகியவை காரணப் பெயர்களாக அமைந்தவை என்பதை நாம் அறிவோம். ஜாவா என்ற பெயர் ஏதேச்சையாக (just like that) சூட்டப்பட்ட பெயரே. ஜேன்ஸ் காஸ்லிங்கும் நண்பர்களும் கேன் டினில் காபி சாப்பிட்டுக் கொண்டே காபியின் பெயரை அவர்களின் மொழிக்குச் சூட்டினார்கள் என்று கூறப்படுவதுண்டு. சி# மொழியின் பெயரை சி-ஷார்ப் என உச்சரிக்க வேண்டும். ஆக, சி# என்பது சி-மொழியின் கூர்மையான வடிவம் என்பதை உணர்த்துவதாகக் கொள்ளலாம். கர்நாடக சங்கீதத்தில் சரிகமபதநி உண்டு. இதற்கு இணையாக மேற்கத்திய இசையில் ABCDEFG என்னும் இசைக் குறியீடுகள் உள்ளன. இசைப்பலகையில் (music keyboard) முதல் கட்டை வெள்ளைக் கட்டை. அது -யைக் குறிக்கும். அடுத்துள்ள கறுப்புக் கட்டை C# என்ற அடையாளத்துடன் காணப்படும். அதனை இசை இயலாளர்கள் சி-ஷார்ப் என அழைப்பர். C என்னும் கட்டையை அழுத்தும்போது ஏற்படும் ஒலியைவிட, சி# கட்டையை அழுத்தும்போது எழும் ஒலி கூர்மையாக ஒலிக்கும். ஆக, இசைப்பலகையிலிருந்த C# அடையாளமும், சி-ஷார்ப் என்னும் இசைச் சொல்லும் சி-மொழியின் பாரம்பரியத்தில் வந்த ஒரு மேம்பட்ட மொழிக்கு மிகவும் பொருத்தமாகவே அமைந்துவிட்டது.

(பாடம்-1.1 முற்றும்)


இந்த வலையகத்தில்

இவ்வலையகத்தின் பக்கங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர்-8, 1024 X 768 பிக்செல் திரைக்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன
வலையக வடிவமைப்பு, உள்ளடக்கப் பதிப்புரிமை © 2009 மு.சிவலிங்கம்